திருவிழா என்ற அருமையான விழா இன்று எத்தனை குழந்தைகளுக்கு தெரியும் என்று தெரியவில்லை. திருவிழா என்றாலே பல அற்புதமான விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். கோவில், தேர், கச்சேரி, கரகாட்டம், முளைப்பாரி, புதிய ஆடை, வளையல் கடை, பொரிகடலை, குடைராட்டினம், தொட்டி ராட்டினம், மஞ்சள் நீர் விளையாட்டு, பூப்பல்லக்கு, இன்னும் எவ்வளவோ இனிமையான விஷயங்கள் இருக்கின்றன.
எங்கள் ஊர் பழைய வத்தலகுண்டுத் திருவிழா விசேஷமானது. சுத்துபட்டி கிராமத்து மக்கள் அனைவருக்கும் பழைய வத்தலகுண்டு மாரியம்மன் கோவில் திருவிழா பொதுவான விழாவாகும். அணைத்து வகை மக்களும் ஒற்றுமையாகக் கொண்டாடும் விழா இத்திருவிழவாகும்.
கம்பம் ஊண்டுதல்:
மாரியம்மன் திருவிழா ஆரம்பிக்கும் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை கம்பம் ஊண்டும் விழா நடக்கும். மஞ்சள் தடவிய வேப்பமரக்கட்டை அம்மன் சந்நிதியின் முன் கொடிமரத்தின் கீழ் நடுவார்கள். அதில் வேப்பிலைகள் கட்டபட்டிருக்கும். கம்பம் ஊன்றிய நாளில் இருந்து 15 ஆம் நாள் திருவிழா நடைபெறும். இந்த புனிதமான கம்பத்திற்கு தினந்தோறும் அதிகாலையில் பெண்கள் மஞ்சள் குளித்து சுத்தமான நீரில் மஞ்சள் கலந்து அதில் வேப்பிலை சொருகி நீருற்றுவர். கோவில் தலத்தில் சிங்கமுகக்குழாய் இருக்கும். அதில் வரும் நீரில் நீராடி, அந்த நீரில் மஞ்சள் கலந்து கொடிமரத்திற்கு நீருற்றுவர். சிறுவர்கள் மிகவும் உல்லாசத்துடன் தினமும் நீராடி, நீருற்ற வருவர். இன்றைய நாகரீக உலகில் இந்த பழக்கம் குறைந்து வருகிறது.
அதிகாலை சில்லென்ற காற்றில் ஈரம் சொட்ட சொட்ட, நுனி மயிர் முடிந்து மஞ்சள் தேய்த்துக் குளித்து, நெற்றி நிறையப் பொட்டு வைத்து, சிறிது பூ வைத்து, சுமங்கலிப்பெண்களும், இளம் கன்னியரும், சிறுவர் சிறுமியரும், வெறும் காலில் நடந்து வந்து, அம்மனை தரிசனம் செய்வது எத்தனை இனிமையான அனுபவம். அதை இக்காலத்து குழந்தைகள் இழக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது.
பால்க்குடம்:
திருவிழா ஆரம்பிக்கும் முதல் நாள் அன்று பால்குடம் எடுக்கும் விழா நடக்கும். சிறுவர் சிறுமியர், ஆடவர், பெண்டிர், அனைவரும் அவரவர் வேண்டுதலுக்கு இணங்க பால் குடம் எடுப்பார். புதிய குடம், சில்வர் அல்லது பித்தளையில் சிறிய குடம், சொம்பு, போன்ற பாத்திரத்தில் பசும்பால், இளநீர், வேப்பிலை, போன்ற பூசைப் பொருட்களைப் இட்டு அதன் மேல் ஒரு தேங்காய் வைத்து வேப்பிலை, பூ சுற்றி விநாயகர் கோவிலில் பூசித்து, பின்பு ஒவ்வுருத்தர் தலையிலும் குடத்தை பூசாரி எடுத்து வைத்து ஆரம்பித்து விடுவார்.
பால்க்குடம் எடுக்கும் பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து, மாலை அணிந்து, நெற்றியில் விபூதி இட்டு, வெறும் காலில், அதிகாலையில் ஆற்றாங்கரை விநாயகர் கோவிலில் இருந்து நடக்கத் தொடங்குவார்கள். ஊரில் உள்ள தெருவெல்லாம் மேலத்தாளத்துடன் வலம் வந்து, பிறகு அம்மன் கோவிலை மூன்று முறை வலம் வந்து அம்மன் சந்நிதியை அடைவர். அங்கு அம்மன்னுக்கு அவர்கள் சுமந்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்படும். பின்பு அவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வர்.
தாய் மாமன், முறை மாமன்கள், பால்குடம் எடுத்தவர்களுக்கு புதிய ஆடை வாங்கித் தருவார்கள். பால்குடம் எடுத்தவர் அனைவருக்கும் விருந்து அளிப்பார்கள்.
பூச்சட்டி:
திருவிழாவின் அடுத்த முக்கியமான நிகழ்ச்சி பூச்சட்டி (அ) தீச்சட்டி எடுத்தல் ஆகும். புதிய அகன்ற மனச்சட்டிகளில் கோவிலில் எரித்த விறகுக் கங்குகளை நிரப்பி அதில் பூ, வேப்பிலை சுற்றி வைப்பார்கள். சட்டி எடுப்பவர்கள் பயபக்தியுடன் மஞ்சள் ஆடை அணிந்து, மஞ்சள் நீரை தலையில் ஊற்றிக் கொண்டு ஈர ஆடையுடன் கைகளில் வேப்பிலை ஏந்தி அதன் மேல் தீச்சட்டி ஏந்தி ஊரை வலம் வருவர்.
பால்குடமும், தீச்சட்டியும் எடுக்கும் மக்கள் கம்பம் நட்ட நாளில் இருந்து பயபக்தியுடன் விரதம் இருந்து வருவர்.
பால்குடம், தீச்சட்டி ஏந்தி தெருக்களில் வலம் வரும் போது அத்தெருவில் வசிப்பவர்கள் அவரவர் வீடுகளின் முன் பக்தர்களின் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள். அவர்களுக்கு பக்தர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பார்கள். அவர்களை அந்த மாரியாம்மனாகவே நினைத்து வணங்
குவார்கள்.
சட்டி ஏந்தும் பக்தர்கள் அம்மனின் அருள் பெற்றவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் அம்மன் அருள் வந்து உறி, மேளங்களுக்கு, ஏற்றவாறு நடனம் ஆடி வருவார்கள்.
கோவிலை மூன்று முறை வலம் வந்தப் பின் சட்டியை கோவிலில் வைத்துவிட்டு அம்மனை வணங்கி செல்வார்கள்.
தீச்சட்டி ஏந்துபவர்கள் பெரும்பான்மையினர் பெரியவர்களே எடுப்பார்கள். ஆண்கள் பெண்கள் என எந்த பேதமும் இங்கு கிடையாது. ஒரு சட்டி மட்டும் இரு கைகளிலும் ஏந்தி வருவர் சிலர். சிலர் இரு கைகளிலும் இரு சட்டி ஏந்தி வருவர். ஒரு சிலர் இரு கைகளிலும் இரு சட்டியும், இடுப்பில் இரும்பு வலயத்தில் நாலு பக்ககங்களிலும் நான்குச் சட்டிகளும் நெருப்புக் கொழுந்து விட்டு எரிய அம்மன் அருள் பெற்றவராய் வருவார்கள்.
ஒன்று கூடி அனைவரம் ஒன்றாக பால்குடம் ஏந்தியும், தீச்சட்டி எடுத்தும், அவரவர் சொந்தப் பந்தங்களுடன் மேளத்தாளத்துடன் பவனி வரும் காட்சி காண கண் கோடி வேண்டும்.
நிகழ்சிகள்:
திருவிழாவில் பக்தி நிகழ்சிகள் மட்டுமன்றி கேளிக்கைகளும் நிறைய உண்டு. சிறுவர்கள் விளையாட குடை இரா ட்டினம், கப்பல் இ ரா ட்டினம், குதிரை இராட்டினம், தொட்டி இராட்டினம், எனப் பல வகையான இராட்டி னங்கள்
போட்டிருப்பார்கள்.
பொம்மைக் கடை, வளையல் கடை, பொரிகடலைக் கடை, பூக்கடை, மிட்டாய்க்கடை, பலூன்க்கடை, கடிகாரக்கடை, பழக்கடை, அல்வாக்கடை, மிக்ச்சர்க்கடை, கலர் பூந்திக்கடை, எனப் பல வகையானக் கடைகள் போட்டிருப்பார்கள்.
தினமும் மாலை வேளைகளில் ஊர் மக்கள் அனைவரும் திருவிழக்கடைகளில் தான் இருப்பார்கள்.
குழந்தைகள் பொம்மை பலூன்களும், பீப் பிகளும், ரப்பர் பம்மைகளும், பொம்மை கார், துப்பாக்கிகளும், வைத்து விளையாடி மகிழ்வார்கள்.
சிறுமிகள் மண் சாமான்கள் சிறிய பானை, குடம், அடுப்பு, தோசைச்சட்டி, பணியாரச்சட்டி, வடைச்சட்டி, என அழகழகாய் மண்ணால் செய்ப்பட்ட விளையாட்டு சாமான்களை வாங்கி மகிழ்வர். அதில் கூட்டஞ்சோறு ஆக்கி விளையாடுவார்கள். ஒற்றுமையும், பகிர்ந்த்துன்னும் பழக்கமும் அங்கே நாம் காணலாம்.
இது மட்டுமன்றி ஒவ்வொரு நாள் இரவுகளிலும் வள்ளித் திருமணம், கந்தன் கருணைப் போன்ற நாடகங்களும், சினிமாக் கா ட்சிகளும், பாட்டுக் கச்சேரியும், தெரு முச்சந்திகளில் மேடைப் போட்டு நடத்துவார்கள். தொலைக்காட்சி இல்லாத நாட்களில் திருவிழாக்கள் ஒரு சிறந்த ஆரோக்கியமான பொழுதுப்போக்காக இருந்துள்ளது.
மஞ்சள் நீர் விளையாடுதல்:
திருவிழாவின் இறுதி நாளில் அம்மன் தன் சகோதரியாகக் கருதப்படும் கோடி மரத்தை எடுக்கும் நாளில் ஆக்ரோஷமாக இருப்பதாக ஐ தீகம். எனவே அம்மனை சாந்தப்படுத்தும் நோக்கில் அனைவரும் அம்மன்னுக்கு மஞ்சள் நீர் ஊற்றுவது ஐதீகம். அம்மன் புறப்பாடு சென்றவுடன் சிறுவர், சிறுமியர் தங்கள் முறைமாமன், முறைப்பெண்கள் மேல் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவார்கள்.
முடிவுரை:
இன்னும் பல விஷயங்கள் திருவிழாவைப் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம். இத்தகைய பல அற்புதங்களும், அருமைகளும் நிரைந்த திருவிழாவை இனி பழைய பழக்கவழக்கங்களுடன் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்.